‘மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை’ - நெல்சனின் மனைவி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அது தொடர்பாக விளக்கம் மோனிஷா தரப்பில் தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துது. எனது கட்சிக்காரர் மோனிஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக காவல் துறை கேட்ட விளக்கத்தை மோனிஷா வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் எதுவும் அவர் தரவில்லை. நிதியுதவி செய்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. உண்மைக்கு புறம்பானவை. மோனிஷா மற்றும் அவரது கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பியதாக கூறப்படுகிறது.

அவருடன் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர், கிருஷ்ணனுக்கு ஏதேனும் அடைக்கலம் கொடுக்க உதவினாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்தே மோனிஷாவிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

நெல்சனின் மனைவி வழக்கறிஞர் என்பதால், தங்கள் வழக்குகள் தொடர்பாக அவரிடம் பேச வேண்டியிருந்ததாகவும் மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மோனிஷா விளக்கம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE