தமிழகத்தில் பல மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் துணை கண்காணிப்பாளர்கள்!

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி பதவி உயர்வின்றி, துணை கண்காணிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறை நாட்டின் 5-வது பெரிய காவல்படை என்ற சிறப்பை கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி தலைமையில் இயங்கும் இக்காவல் துறையில் சுமார் 1 லட்சத்து 33 ஆயிரம் போலீஸார் பணியில் உள்ளனர். டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்.பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட பல்வேறு பதவிகளால் காவல் துறை கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி மற்றும் மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு மூலம் தகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டு காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

மேலும், பணி காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக காவல் துறையில் கீழ்மட்ட அளவில் பதவி உயர்வில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் 44, கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. போதிய தகுதி இருந்தும் அந்த இடங்களில் பணியமர்த்தப்படாமல் துணை கண்காணிப்பாளர்கள் (1996ல் நேரடி எஸ்.ஐயாக தேர்வு செய்யப்பட்டவர்கள்) தவித்து வருகின்றனர்.

இவர்கள் சுமார் 30 ஆண்டு காலம் பணிபுரிந்தும் கூடுதல் எஸ்.பி பதவி உயர்வின்றியே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இந்த பதவி உயர்வு வழங்கப்படாததால் அதன் கீழ் உள்ள காவல் ஆய்வாளர்கள் (1997-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ ), துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற முடியாமல், அவர்களில் பலரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகின்றனர்.

மேலும், 2011 நேரடி எஸ்.ஐயாக தேர்வு செய்யப்பட்டவர்களும் இன்னும் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு பெறாமல் தவித்து வருகின்றனர். இப்படி சங்கிலி தொடர் போல பதவி உயர்வு இல்லாமல், தகுதி இருந்தும் பதவி உயர்வின்றி மேற்படி போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் நிலை நிலவி வருகிறது. எனவே, காலி பணியிடங்களை நிரப்பும் வகையிலும், தகுதியின் அடிப்படையிலும் சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறையினரிடையே வலுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE