குமரி மலையோரங்களில் கனமழை: மோதிரமலை பாலம் இழுத்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மோதிரமலை - குற்றியாறு தற்காலிக பாலம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. இதில் மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், நேற்று இரவில் இருந்து விடிய விடிய மிதமான மழை பெய்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக அணைகளுக்கு நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 70 மிமீ., மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 48 மிமீ., ஆனைகிடங்கில் 26, சுருளோட்டில் 25 மிமீ., மழை பதிவானது.

மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1346 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.42 அடியாக உள்ள நிலையில் உபரியாக 753 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகு வழியாக 579 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 605 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 510 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றில் 13.87 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 450 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேறி வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் மலைகிராமங்களான மோதிரமலை-குற்றியாறை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது. அங்கு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாலத்தை கரைபுரண்டு ஓடிய தண்ணீர் இழுத்து சென்றது. இதனால் அவ்வழியாக குற்றியாறு, மற்றும் மலைகிராமங்களுக்கு செல்லும் அரசு பேரூந்து மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திரும்பி சென்றன.

தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டதால் தச்சமலை, மோதிரமலை, கிழவியாறு, குற்றியாறு உட்பட 15க்கும் மேற்பட்ட மலைகரிாமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இன்று மலைகிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதைப்போல் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கடல்போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 4வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE