கரூரில் குடிநீர் திட்ட குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர் - மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தேசியமங்கலத்தில் கூட்டு குடிநீர்த் திட்ட குழாய் உடைந்து அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தேசியமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 260 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இங்கு 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் வகுப்பறைக்கு வெளியே பள்ளி வளாக பகுதியில் மேற்கூரை அமைத்து வாரண்டா, சுற்றுச்சுவரில் கருப்பு வர்ணம் பூசி அப்பகுதியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளியின் சுற்றுச் சுவரையொட்டி குளித்தலையில் இருந்து திருச்சி மாவட்டம் மருங்காபுரி செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய் செல்கிறது. இக்குழாய் இன்று (ஆக.21) மதியம் திடீரென உடைந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது. மேலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வந்ததால் பள்ளி வளாகத்தினுள் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பள்ளி வளாகத்தில் நிரம்பிய தண்ணீர் வெளியேறி அருகேயுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இதையடுத்து. குடிநீரேற்ற நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு தண்ணீரேற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் தண்ணீர் வரத்து உடனடியாக நிற்காது என்பதால் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி பள்ளி வளாகத்தில் நிரம்பி வருகிறது. பள்ளி வளாகம் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளதால் உடைந்த குடிநீர் குழாய் மற்றும் பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்பதால் பள்ளிக்கு இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE