பர்கூர் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய விவகாரம் - போலி என்சிசி பயிற்சியாளரின் பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே போலி என்சிசி பயிற்சியாளர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளிக்கு 2-வது நாளாக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், விதிமீறி முகாம் நடந்த பள்ளிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த விதிமீறி நடந்த என்சிசி முகாமில், பங்கேற்ற 12 வயது மாணவிக்கு, பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் (35) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது தொடர்பான புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ், சிவராமன் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சுதாகர் என்பவரைத் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிக்கு நேற்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: சிவராமன் நடத்திய போலி என்சிசி முகாமில், மாணவிகளிடம் தலா ரூ.1,500 பெற்றுள்ளார். இதற்காக என்சிசி சின்னம் பொறிக்கப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்களை விழா நடத்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிவராமன் ஏற்கெனவே விதிமீறி முகாம் நடத்திய பள்ளிகளில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

பயிற்சியாளர் பணி இல்லை: இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கோபு கூறியதாவது: பள்ளி, கல்லூரி என்சிசி மாணவ, மாணவிளுக்குப் பயிற்சி அளிக்க ராணுவத்தில் முறையாக 6 மாதம் பயிற்சி பெற வேண்டும். என்சிசியில் பயிற்சியாளர் என்ற பணி கிடையாது.

சிவராமன்

பள்ளிகளில் முகாம் நடத்த ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சேலம் என்சிசி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். என்சிசி அலுவலர்கள் நேரடியாக ஒருங்கிணைந்து முகாம் நடத்துவார்கள். இதற்குச் சான்றிதழ்கள், பதக்கம், கேடயங்களை என்சிசி வழங்கும். தனிப்பட்ட முறையில் வழங்க முடியாது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாரூர், நாகரசம்பட்டி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மட்டுமே தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

சிவராமன் பள்ளியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையில் மாணவராக இருந்துள்ளார். முகாம் நடத்த அவர் தகுதியற்றவர். அரசியல் கட்சியில் வகித்தப் பதவியைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளை மிரட்டி முகாம்கள் நடத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE