காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால் கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 92 கோடி யூனிட் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் 9,100 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின்னுற்பத்தி சீசன் ஆகும்.

சீசன் சமயத்தில் வழக்கமாக காற்றாலைகளில் இருந்து தினமும் 8 முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். நடப்பு சீசனில் காற்றின் வேகம் போதிய அளவுக்கு இல்லை.

இதனால், மே முதல் இம்மாதம் வரை காற்றாலைகளில் இருந்து 626 கோடி யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 718 கோடி யூனிட்களாக இருந்தது. கடந்த சீசனில் தினமும் சராசரியாக 6.65 கோடி யூனிட்களாக இருந்த காற்றாலை மின்னுற்பத்தி இந்த சீசனில் 5.79 கோடி யூனிட்டாக குறைந்துள்ளது.

இதுகுறித்து, காற்றாலை மின்னுற்பத்தியாளர்கள் கூறுகையில், ``காலநிலை மாற்றத்தால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த சீசனில் மே முதல்ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி வரை 92கோடி யூனிட் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதத்துடன் காற்றாலை சீசன் முடிகிறது. காற்றின் வேகம் அதிகரித்தால் காற்றாலை சீசன் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE