தேவையின்றி குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் சிறையில் அடைப்பதால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு? - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு போலீஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடலாமா என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குண்டர் தடுப்புச் சட்டத்தை போலீஸார் தேவையில்லாமல் தங்களது இஷ்டம்போல பயன்படுத்தி வருவதாகவும், சில வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டிருந்தனர். மேலும், இதுதொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி விளக்கம் தரவும் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒருவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவார் என்ற அச்சத்தில் அவரை போலீஸார் எளிதாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து விடுகின்றனர். இதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்படும் வழக்குகள் பல்வேறு சம்பிரதாயங்களுக்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பின்னர் உயர் நீதிமன்றம் அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ரத்து செய்கிறது.

போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதும், அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 6 மாதம் சிறையில் இருந்த அந்த நபரின் அடிப்படை உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களை உயர்நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதேநேரம் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவ்வளவு பேரிடமும் போலீஸார் லஞ்சம் வாங்குகின்றனர். போலீஸார் தங்களது சுயலாபத்துக்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

மிகப்பெரிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் குறை கூறவில்லை. பொத்தாம் பொதுவாக பயன்படுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு போலீஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடலாமா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘இந்த வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், வழக்கை பொறுத்து வழங்கினால் பாதிப்பு ஏற்படாது. குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாதுஎன டிஜிபிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். போலீஸார் சாலையில் நின்றால்தான் வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை மதிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து போலீஸாரையும் குறை கூற முடியாது. எல்லா துறைகளிலும் லஞ்சம் உள்ளது" என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘நீதித்துறையில் உள்ள ஊழல்வாதிகள் மீது உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அனைத்து போலீஸாரையும் நாங்கள் குறை கூறவில்லை. எனவே தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என டிஜிபிக்கு அறிவுறுத்துங்கள்’’ என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்