சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிக்கு அவர் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அவருடன் கைகோத்து கொலை திட்டம் அரங்கேற துணையாக நின்றவர்கள் யார் என்ற பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து துப்பு துலக்கி வருகின்றனர்.
» சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
» காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு
முதல்கட்டமாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்களின் செல்போன் தொடர்புகள் குறித்த விவரங்களை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பியதாக கூறப்படுகிறது.
முன்னதாக அவருடன் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர், கிருஷ்ணனுக்கு ஏதேனும் அடைக்கலம் கொடுக்க உதவினாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்தே மோனிஷாவிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
நெல்சனின் மனைவி வழக்கறிஞர் என்பதால், தங்கள் வழக்குகள் தொடர்பாக அவரிடம் பேச வேண்டியிருந்ததாகவும் மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மோனிஷா விளக்கம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நெல்சன் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படும் தகவல் சினிமாவட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘சந்தேக நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கூற இயலாது’ என்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago