சென்னையில் மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்: சீமான், பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், ``தமிழ்நாடு மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரியம், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக களஉதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து 400,500 கி.மீட்டர் தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிசுமையிலும், மன அழுத்தத்துடனும் பணி மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று மின்வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக ஆணைவழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் ஆக.22-ம் தேதி முதல் அனைத்து மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்’' என்றனர்.

இப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு அளித்தார். அப்போது, அவர் பேசுகையில்,‘`இன்றைக்கு எல்லாருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் கேங்மேன் பணியாளர்களை களஉதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஊழியர்களை அவர்களுடைய வாழ்விடங்களுக்கு அருகில் பணி நியமனம் செய்ய வேண்டும்'’ என்றார்.

இதேபோல், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘`கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும்'’ என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பதிவில்மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE