பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ‘பர்கூரில் முகாம் நடத்தியவர்கள் போலி’ என என்சிசி நிர்வாகம் விளக்கம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த விவகாரத்தில், அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்சிசி முகாம் என்றும் , அதில் தொடர்புடைய எவரும் என்சிசி அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் என்சிசி தலைமை அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் தங்கிய 8-ம் வகுப்பு மாணவிக்கு, பயிற்சியாளர் சிவராமன் (35) பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் நடந்த முகாமுக்கும், என்சிசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என என்சிசி தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து என்சிசி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தேசிய மாணவர் படை (என்சிசி) முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த மாணவி பங்கேற்ற முகாம் ஒரு போலியான முகாம். இதேபோல அதை நடத்தியவர்களும் என்சிசி உறுப்பினர்கள் அல்ல. அவர்களும் போலியானவர்கள்.

என்சிசி-க்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.என்சிசி முகாம் சில பள்ளிகளில் நடைபெறுவது வழக்கம். அப்படி என்சிசி முகாம் நடைபெறும் பட்டியலில் இந்த பள்ளி இல்லை. என்சிசி முகாமுக்காக இந்த பள்ளி எந்தவித பதிவும் செய்யப்படவில்லை. தற்போது இதில் தொடர்புடைய நபர்களுக்கும், என்சிசி-க்கும் எந்த தொடர்பும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி எந்த ஒரு முகாமையும் நடத்தவில்லை,” என அதில் கூறப்பட்டுள்ளது.

சிஇஓ விசாரணை: இந்த விவகாரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறியது: “தனியார் பள்ளியில் நடந்த முகாமுக்கும், என்சிசிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர். விதிகளை மீறி நடத்தப்பட்ட முகாமில், மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிக்காட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை. இப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. சிஇஓ மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு

இச்சம்பவம் குறித்து புகார் பெற்றவுடன் 4 தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி, பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள், விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வெளி இடங்களில் மாணவிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக '1098' என்கிற எண்ணில் புகார் அளிக்க வேண்டும்,” என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 9 பேருடன், தருமபுரி மாவட்டம் எட்டிமாரம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்(27), காவேரிப்பட்டணம் திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக தொடர்புடைய பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார், பள்ளி வளாகத்தில் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE