உதகையில் 2 மணி நேரம் கொட்டிய கனமழை: பேருந்து பணிமனைக்குள் சூழ்ந்த வெள்ளம்!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சாக்கடை கழிவுடன் தண்ணீர் புகுந்ததால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. மேலும், தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை தொடர்மழை வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத மழை பாதிப்பால் நீலகிரி மாவட்டம் ஸ்தம்பித்தது. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு நிலை முற்றிலும் முடங்கியது. இதேபோல் மின்கம்பங்கள் பல இடங்களில் விழுந்து சிக்கலானது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி இந்த பாதிப்புகளை சரி செய்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதற்கிடையே தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் நாளை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை உட்பட 12 மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு மாறாக கடந்த 4 நாட்களாக வெயிலான காலநிலை நிலவியது. வார இறுதி நாளான நேற்று, சுற்றுலாத்தலங்கள் களை கட்டின. இந்நிலையில் இன்று காலை வரை நன்றாக வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் திடீரென்று காலநிலை மாறி மாலையில் உதகை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேர மழை புரட்டி எடுத்தது. உதகை கோடப்ப மந்து கால்வாயில் சாக்கடை நீர் கலந்து வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே பாலத்தில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன.

பேருந்து நிலையம் அருகில் உள்ள பணிமனையை ஒட்டி, கால்வாய் செல்வதால் அங்கிருந்து கழிவு நீருடன் கலந்து மழைநீர் போக்குவரத்து பணிமனைக்குள் புகுந்தது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் உதகை கிளை 1 மற்றும் உதகை கிளை 2ல், வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். சில பேருந்துகள் வாராந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றன.

தண்ணீர் புகுந்ததால் பேருந்து இயக்கத்தில் சற்று பிரச்சினை ஏற்பட்டு சரியானது. தொடர் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் பணிமனைக்குள் மழை நீர் வருவது ஊழியர்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தொட்ட பெட்டா அருகே உள்ள குந்த சப்பை பகுதியில் சாலயோரம் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் மார்க்கெட் கடைகளுக்குள்ளும், தாழ்வான இடங்களில் அனைத்தும் தண்ணீர் தேங்கி நின்றது. உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE