ரேஷன் கடை ஊழியர்கள் செப்.5-ல் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” என தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர் சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள், “நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சீரமைக்கவேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நியாய விலைக்கடை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE