விபத்தில் மூளைச்சாவு அடைந்த தி.மலை விவசாயி உடல் உறுப்புகள் தானம்

By வ.செந்தில்குமார்

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்குத் தானமாக அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கங்காவரம் அருகே நவாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வேலு (45). இவருக்கு சித்ரா என்ற மனைவியும் கவுதம் என்ற மகனும் கவுதமி என்ற மகளும் உள்ளனர். செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் வேலு படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த வேலு நேற்று இரவு (ஆக.18) மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க வேலுவின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

வேலுவின் உடல் உறுப்புகள் அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று (ஆக.19) காலை மேற்கொள்ளப்பட்டது. வேலுவின் ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் சென்னை மருத்துவர் ரேலா மருத்துவமனை, நுரையீரல் மற்றும் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை, கல்லீரல் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. இதன்மூலம், வேலுவின் உடல் உறுப்புகள் 5 பேருக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE