“பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது” - மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்:பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களை எதிர்க்கின்ற அணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இருக்கும்,” என கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளுநர் மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளோம். திமுகவும், ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். அரசும், ஆளுநரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் திமுகவுடன் தேர்தல் ரீதியாகவும் கொள்கை அளவிலும் கூட்டணியில் உள்ளோம். ஆளுநரின் தேநீர் விருந்துக்கு செல்வது, நாணயத்தின் வெளியீட்டு நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்பது போன்ற நிகழ்வுகள் அரசு சார்பில் நடத்தப்பட்டவை. என்னதான் விருந்துக்கு சென்றாலும், ராஜ்நாத் சிங்கை அழைத்தாலும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படாது. பாஜக தன்னை கொள்கை ரீதியாக மாற்றிக் கொள்வதற்கும் எந்த வழியும் இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயத்தை வெளியிட உடனடியாக ஒத்துக்கொண்ட மத்திய அரசு, தமிழக அரசு கேட்கும் நிதியை, கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை, தமிழக அரசையும், தமிழக மக்களையும் புறந்தள்ளுகிற போக்கில் எந்த மாற்றமும் இல்லை. அதனால், பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது. பாஜகவை எதிர்ப்பது என்கிற ஒரு விஷயத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத, மதவெறி அரசியலை எதிர்கின்ற அடிப்படையில், தற்போது இந்தக் கூட்டணியில் இருக்கின்றோம்.

திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிக்கின்றோம். மக்கள் விரோத போக்கை கடுமையாக எதிர்க்கிறோம். வருகிற 28-ம் தேதி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி, எதிரே போராட்டம் நடத்த உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு பாதகம் ஏற்படுத்துகின்ற அம்சங்களுக்கு எதிராக போராடுவோம். பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE