மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் வீடு, அலுவலகம் உட்பட12 இடங்களில் போலீஸார் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசுஊழியர்கள் மற்றும் முதியோர் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டிதருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் ரூ.525 கோடியை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்க நிறுவனம் மறுப்பதாகவும் குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் தரவில்லை என்றும் புகார் எழுந்தது.

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.50 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமை நாதன் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தேவநாதன் யாதவின் வீடு, அவர் நடத்திவரும் தொலைக்காட்சி அலுவலகம், அவர் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில், சுமார் ரூ.4 லட்சம் ரொக்கம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மோசடி தொடர்பான பல முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெகன் கட்சியினருக்கு கடன்: நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டிய தேவநாதன் யாதவ், முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக பணம் திரட்டினார். கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட ஜெகன் மோகன் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை அதிக வட்டிக்கு தேவநாதன் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் கடனாக பெற்ற அந்த பணத்தை வைத்து தேர்தலில் ஜெகன் கட்சி எம்எல்ஏக்கள் பலர் வெற்றி பெற்றனர். கடனுக்கான வட்டியை மாதா மாதம் அதாவது, கடந்த மே மாதம் வரை தேவநாதனின் ஆட்கள் மூலம் அவர்கள் தவறாமல் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இதேபோல, இந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கும் ஜெகன் கட்சியை சேர்ந்த பலருக்கு தேவநாதன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜெகன் கட்சி வேட்பாளர்கள் 175 பேரில் 164 பேர் தோல்வி அடைந்தனர். ஆட்சியும் மாறியது.

இதனால், தேவநாதன் கொடுத்த கடன் தொகைக்கான வட்டி சரிவர தற்போது வருவதில்லை என்று கூறப்படுகிறது. வட்டியே சரியாக வராத நிலையில் அசல் எப்படி வருமோ என அஞ்சும் நிலையில் தேவநாதன் யாதவ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE