‘அம்மா மருந்தகம், முதல்வர் மருந்தகம்’ இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மருந்தகத்துக்கும், அம்மா மருந்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டை கடந்த பழமைவாய்ந்த மருத்துவமனையாகும். பழமைவாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 36 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 1500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

வருகிற ஜனவரி மாதம் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தமிழக முதல்வர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும்போது, 200 படுக்கைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை வழங்க உள்ளது.

மேலும், இந்த மருத்துவமனையில் 10,076 முறை செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு செய்யப்பட்டு மருத்துவ சாதனை புரிந்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 3,13,864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் 75,316 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,800 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. மேலும் 9,19,318 ரத்த பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் இல்லை: உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தைப்பொங்கல் அன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் பயன்பாட்டுக்கு வரும். இந்தத் திட்டத்துக்கும், அம்மா மருந்தகம் என்ற பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE