தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு; உறவினர்கள் வராததால் களையிழந்த கல்யாண வீடு: சமைத்த உணவுகள் வீணான பரிதாபம்

By சி.காவேரி மாணிக்கம்

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உறவினர்கள் வராமல் கல்யாண வீடு களையிழந்து காணப்பட்டது. அவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவும் வீணாகிப் போனது.

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் பல நாட்களாகவே தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர் போராட்டக்காரர்கள்.

கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்கப் பார்த்தனர் காவல்துறையினர். ஆனால், அவர்கள் உறுதியாக நிற்கவே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பத்துக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துள்ளனர்; குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுக்க ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுபமுகூர்த்த தினமான இன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பெரிய அளவில் உறவினர்கள் கலந்து கொள்ளாததால், கல்யாண வீடு களையிழந்து காணப்பட்டது. தூத்துக்குடி, டுவிபுரத்தைச் சேர்ந்தவர் லின்ஸி பிரிசில்லா. எம்.டெக். படித்துள்ள லின்ஸிக்கும், குவைத்தில் பணிபுரியும் நெல்லை வள்ளியூரைச் சேர்ந்த நிஷாந்திற்கும், தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள அபிராமி மஹாலில் இன்று திருமணம் நடைபெற்றது. மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு, இருவீட்டார்களும் உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்துள்ளனர்.

ஆனால், தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால், பெரும்பாலான உறவினர்களால் திருமணத்துக்கு வரமுடியவில்லை. கலவரம், பேருந்து வசதி இல்லாதது ஆகியவற்றாலும் உறவினர்களால் வர முடியவில்லை. மணப்பெண் சென்னையில் படித்தவர் என்பதால், அவருடைய நண்பர்கள், வெளியூர்களில் உள்ள உறவினர்கள் பலரும் தூத்துக்குடி எல்லைக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களால் அங்கிருந்து தூத்துக்குடிக்கும் நுழைய முடியவில்லை. இங்கிருந்து சென்று வேனில் அழைத்து வரலாம் என்றாலும், வேன் ஓட்டுநர்கள் யாரும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்பதால், பலர் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் அப்படியே திரும்பியிருக்கின்றனர்.

4 ஆயிரம் பேராவது திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எண்ணி சமைத்த உணவு, ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டதால் வீணாகிப் போனது. கலவர சூழ்நிலை காரணமாக வெளியில் சென்றும் உணவைக் கொடுக்க முடியாததால், அதை அப்படியே குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது. கலவரம் காரணமாக, திருமணத்துக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை எளிதில் வாங்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது. எனவே, கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் சமைத்த உணவுகளை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டதால் வருத்தத்தில் இருக்கின்றனர்.

“கல்யாணம் என்றால் ஆரவாரத்துடன் நடைபெறும். ஆனால், இந்தச் சூழ்நிலையில் எங்களால் திருமணத்தை அப்படி நடத்த முடியவில்லை. பத்திரிகை அடித்து எல்லாருக்கும் கொடுத்து விட்டதாலும், மாப்பிள்ளைக்கு விடுமுறை கிடைக்காது என்பதாலும் குறித்த நேரத்தில் கல்யாணத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வழக்கமான கல்யாணங்களைப் போல பந்தல் போடவோ, ஸ்பீக்கர் வைத்து பாட்டு போடவோ எங்கள் மனது இடம் கொடுக்கவில்லை” என்கிறார் மணப்பெண்ணின் உறவினரான அஜித்.

மணப்பெண்ணின் வீட்டைப் பொறுத்தவரை, 24 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் சுபநிகழ்வு இது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கோலகலமாகக் கொண்டாடியிருக்க வேண்டிய இந்தத் திருமண நிகழ்வு, அவர்களுக்கு வருத்தமாய் முடிந்தது ஆகப்பெரிய சோகம்!

படங்கள் உதவி: புதிய தலைமுறை தொலைக்காட்சி

“ஒரு வீட்டை நிர்வகிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, நாட்டை நிர்வகிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?” - விஜய் ஆண்டனி கேள்வி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்