“கூட்டாட்சி தத்துவம், நாட்டு நலனுக்காக பாடுபட்டவர்” - கருணாநிதி நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: “கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்” என்று அவரது நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விழாவில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.

மகளிர் உரிமை மற்றும் பிற்படுப்பத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காக தீவிரமாக உழைத்தவர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவரது அரசாங்கம் இயற்றியது. மகளிர் சுய உதவி குழுக்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

விவசாயத் தொழிலாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை உருவாக்கினார். நாட்டின் முன்னேற்றத்தில் அவரது கவனம் இருந்தது. இந்திய ஜனநாயகத்தின் பலம் பன்முகத்தன்மை என்பதை அறிந்தவர். மாநில உரிமைகள் சார்ந்து குரல் கொடுத்தவர். கூட்டாட்சி தத்துவத்தை அறிந்தவர்.

அவர் முதல்வராக இருந்த காலத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. அவரது பார்வை தமிழகத்தில் மட்டும் நின்றுவிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தேசிய வளர்ச்சிக்கு மாநில வளர்ச்சி இன்றியமையாதது என்பதை அறிந்தவர். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள், அதற்காக மேற்கொண்ட பணிகள் முக்கியமானது” என்று ராஜ்நாத் பேசினார்.

நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கருணாநிதி அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்து நிற்கிறார் கருணாநிதி” என்று புகழாரம் சூட்டினார். அவரது முழுமையான பேச்சு விவரம் > “கருணாநிதியை கவுரவித்த மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு நன்றி!” - நாணய வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE