150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேடு: மதுரை மாநகராட்சி பில்கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை; மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 5 பில்கலெக்டர்களை ஆணையாளர் தினேஷ்குமார் ’சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். கடந்த 2022, 2023ம் ஆண்டில் நடந்த இந்த முறைகேட்டால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள், இந்த கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்து, 6 மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி வசூல் செய்கிறார்கள். மேலும், ஒவ்வொரு வார்டிலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களை, அந்தந்த மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் பில்கலெக்டர்கள் கண்காணித்து நேரடியாக சென்று ஆய்வு செய்து அளந்து சொத்து வரி நிர்ணயம் செய்கிறார்கள்.

கடந்த காலத்தில் புதிய கட்டிடங்களுக்கு பில்கலெக்டர்கள் சொத்து வரி நிர்ணயம் மற்றும் வரிவசூலை அதிகாரிகள் பெரியளவில் கண்காணிக்காமல் இருந்தனர். அதனால், பில்கலெக்டர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு கட்டிடங்களுக்கு குறைவாக சொத்து வரி நிர்ணயம் செய்வதும், அரசியல் பின்னணியில் உள்ளவர்களிடம் சொத்து வரி வசூல் செய்யாமலும் ஏமாற்றி வந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் வந்தபிறகு, சொத்து வரி வசூல் நிலவரம், புதிதாக சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டிடங்களையும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வுக்கூட்டங்களில் துணை ஆணையர்கள், வருவாய்துறை உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், பில்கலெக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் சொத்து வரியை ஆன்லைனில் ஆய்வு செய்தபோது திடீரென்று சில கட்டிடங்களை சொத்து வரி நிர்ணயம் செய்ததில் காணவில்லை. அந்த கட்டிடங்களை ஆய்வு செய்தபோது சொத்து வரியை முறைகேடாக குறைத்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், மாநகராட்சி 100 வார்டுகளிலும் 2 உதவி ஆணையாளர்கள் தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து அனைத்து கட்டிடங்களுக்கான சொத்து வரியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக சொத்து வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடு செய்த 76வது வார்டு பில்கலெக்டர் கே.ராமலிங்கம் (மண்டலம்-3), பி.மாரியம்மாள் (5வது மண்டலம் இளநிலை உதவியாளர்), 6வது வார்டு பி.ரவிச்சந்திரன் (1வது மண்டலம்), 64வது வார்டு பில்கலெக்டர் எம்.கண்ணன்(2வது மண்டலம்), 85வது பில்கலெக்டர் பி.ஆதிமூலம் (4வது மண்டலம்) ஆகியோரை ஆணையாளர் தினேஷ்குமார் ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “புதிதாக சொத்து வரி விதிப்பது, தொடர்ந்து வரி வசூல் செய்வது போன்ற பணிகள் ஆன்லைனில் ஒரு சாப்ட்வேர் மூலம் பில்கலெக்டர்கள் செய்து வருகிறார்கள். புதிதாக ஒரு சொத்து வரி விதிக்க வேண்டுமென்றால், பில்கலெக்டர் ஐடியில் இருந்து லாக்இன் செய்து அந்த சாப்ட்வேரில் சொத்து வரி நிர்ணயம் செய்து, அதன்பிறகு இளநிலைஉதவியாளர், உதவி வருவாய் அலுவலர், உதவி ஆணையாளர்(வருவாய்துறை) ஆகியோர் ஐடிகளுக்கு செல்லும். இதில், சதுர அடி அதிகமாக இருந்தால் துணை ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்த முறையில் ஒரு முறை வரி விதித்துவிட்டால், அந்த வரியை குறைப்பதற்கான அதிகாரம் இரண்டு வழிமுறைகளில் உள்ளன. ஒன்று நீதிமன்றம் மூலம் ஆணைப்பெற்று வர வேண்டும் அல்லது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் வைத்துதான் சொத்து வரியை ஒரு கட்டிடத்திற்கு குறைக்க முடியும்.

ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் மாநகராட்சி 5 மண்டலங்களில் மொத்தம் 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை பில்லெக்டர்கள் குறைத்துள்ளார்கள். இந்த 150 கட்டிடங்களுக்கு 6 மாதத்திற்கு மாநகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி ரூ.25 லட்சத்தை குறைத்துள்ளார்கள். 2022, 2023ம் ஆண்டுகளில் இந்த முறைகேடு நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த முறைகேட்டால் ரூ.1.50 கோடி சொத்து வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE