கொடைக்கானலில் தொடர் மழையால் நிலவும் ரம்மியான சூழல்: குவிந்த சுற்றுலா பயணிகள்

By பி.டி.ரவிச்சந்திரன்


கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர் மழையால் பசுமை போர்த்திய மலைமுகடுகளுக்கு இடையே, மேகக்கூட்டங்கள் உலாவரும் ரம்மியான சூழலில் இயற்கை எழிலை சுற்றுலாபயணிகள் ரசித்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை மட்டுமல்லாமல், வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலா தலமான கொடைக்கானலின் இயற்கை எழில் கெடாமல் மேம்படுத்த முன்நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் எத்தனை பேர் வந்து செல்கின்றனர் என கணக்கெடுக்க ஏதுவாக நீதிமன்றம் இ பாஸ் முறையை கொண்டுவந்துள்ளது.

இதை ஒரு தடையாக நினைக்காமல் ஆக்கபூர்வமான பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் எந்த சிரமம் இன்றியும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் துவக்கமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் மரங்கள் தலைத்தோங்கி பசுமையாக காட்சியளிக்கின்றன. புல்வெளிகளும் பசுமையாக சுற்றுலா பயணிகளை கவர்கிறது. பசுமை போர்த்திய கொடைக்கானல் மலையில் பகலில் சூரியனே தெரியாதவாறு அடிக்கடி மேகக்கூட்டங்கள் மறைத்து வெயில் தரையில் படாதவாறு பார்த்துக் கொள்கின்றன. இதனால் இதமான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
கொடைக்கானல் மோயர் பாய்ன்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

இயற்கை எழிலை ரசிக்க வாரவிடுமுறை தினங்களில் அதிகம் பேர் கொடைக்கானல் நோக்கி பயணிப்பது வாடிக்கையாகிவிட்டது. இன்றும் சுற்றுலா தலங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அதிகம் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரிசெய்தும் மகிழ்ந்தனர்.

நேற்று கொடைக்கானலில் அதிகபட்சமாக பகலில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. மாலையில் மிதமான மழை பெய்தது. குறைந்தபட்சமாக இரவில் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இதனால் குளிர் உணரப்பட்டது. இதமான தட்பவெப்பநிலை மற்றும் இயற்கை எழிலை ரசிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்துவண்ணம் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE