போலி ஆட்சேர்ப்பு விளம்பரங்கள்; ஏமாற வேண்டாம் - புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் எச்சரிக்கை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜிப்மர் பெயரில் போலி ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியாவதுடன், வேலைக்காக மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் எச்சரித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜிப்மர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் போலியான ஆட்சேர்ப்பு விளம்பரங்கள், அழைப்பு கடிதங்கள், நியமன கடிதங்கள் மற்றும் வேலை பெறுவதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து பணம் வசூலிக்க மோசடி நபர்கள் முயற்சிப்பது போன்ற தகவல்கள் ஜிப்மரின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஜிப்மரின் ஆட்சேர்ப்பு முறையானது, தனது அதிகாரப்பூர்வ தளத்தில் இணையதளத்தில் (https:// jipmer.edu.in) அறிவித்து, பிறகு உள்ளூர் மற்றும் தேசிய செய்தித்தாள்கள், வேலைவாய்ப்பு செய்திகள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மேலும், தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையும் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். போட்டித் தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆட்சேர்ப்பு முறை நடைபெறுகிறது. விரிவான ஆட்சேர்ப்பு விளம்பரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் போன்றவை மேற்கூறிய இணையதளத்தில் உள்ளன.

எனவே, ஏமாற்றும் நபர்களின் இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

மேலும் ஜிப்மர் நிறுவனம் இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு எப் போதும், எந்த விதத்திலும், பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறது. ஜிப்மர் ஆட்சேர்ப்பு தகவ லின் நம்பகத்தன்மையை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சரிபார்க்கலாம். அல்லது adminhr@jipmer. ac.inக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இவ்வாறு ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE