வேலைநிறுத்தம் வாபஸ்: 8 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு இன்று (ஆக.18) கடலுக்குச் சென்றனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 08 அன்று கைது செய்தனர்.

35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்ட் 22 வரை வரையிலும் நீதிமன்ற காவலில் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 10லிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் போராட்டமும் அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ராமேசுவரம் வட்டாட்சியர், மீன்வளத்துறை துணை இயக்குநர் தலைமையில் பாம்பன் மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு தரப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தையும், பாம்பன் பாலம் சாலை மறியல் போராட்டத்தையும் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எட்டு நாட்களுக்கு பிறகு பாம்பனிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE