மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம்: தேவநாதன் யாதவ் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் சோதனை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக தேவநாதன் யாதவ் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனை மேற்கொண்டனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 13ம் தேதி, தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். 10 மணி நேரத்துக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமைநாதன் சென்னையிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் தொடர்புடைய நிதி நிறுவனம், அவர் நடத்தி வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அவரது அலுவலகம், மேலும் அவர் தொடர்புடைய இடங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று (18ம் தேதி) சோதனை நடத்தினர். இதில், ரூ.4 லட்சம் ரொக்கம், 2 கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவைகள் மட்டும் அல்லாமல் மோசடி தொடர்பாக பல முக்கிய ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக சில இடங்களுக்கு சீல் வைத்தும் சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE