உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்; முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக முன்னாள் எம்பி தொடர் போராட்டம் அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னாள் எம்பியும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது: “சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டுகிறோம். ஆனால் அதே அதே நேரத்தில் உள்ளாட்சி அதிகாரத்தைப் பற்றியோ 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலைப் பற்றியோ ஒரு வார்த்தை குறிப்பிடாதது வருத்தத்தை அளிக்கிறது. இது இந்திய அரசியல் அமைப்புச் கூட சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.

கடந்த 13 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோரை ஆய்வு செய்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு ஒரு நபர் கமிஷனை 17-12-20 21 அன்று நியமித்து 6 மாதங்களில், அதாவது 16-6-2022க்குள் பணி முடிய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது நடந்திருந்தால் 2022 இல தேர்தலை நடத்தி இருக்கலாம், ஆனால் 2 வருடம் 8 மாதங்கள் ஆகியும் இந்த பணியை முடியல்லை.

இதைக் காரணம் காட்டி முதல்வர் ரங்கசாமி தேர்தலை தள்ளிப் போடுகிறார். தனி நபரின் விருப்பத்தால் அடித்தள மக்களுக்கான உரிமை பறிக்கப்படுவதோடு மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தவாறு ஜனநாயகம் நடைபெற முடியாது. சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற வேண்டும்.

எனவே முதல்வரின் உள்ளாட்சிக்கு எதிரான மனப்போக்கை கண்டித்து 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் புதுவை, காரைக்காலில் உள்ள மூன்று நகராட்சி அலுவலகங்களின் முன்பும், 10 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களின் முன்பும் நடத்தப்படும். அதன் முதல் போராட்டம் நாளை மேறுநாள் செவ்வாய்க்கிழமை, உள்ளாட்சிக்கு உயிர் கொடுத்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளில் காலை 10 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்.” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE