சென்னை: மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்ட செலவினங்களுக்கான நிதியாக ரூ.9,286 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய பாதை, இரட்டை பாதை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நடைபெறும் 5 புதிய பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு, புதிய அரசின் மத்திய பட்ஜெட் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தெற்குரயில்வேயில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரம்அடங்கிய பிங்க் புத்தகம் நேற்று முன்தினம் வெளியானது.
இதில், தெற்கு ரயில்வேயில் புதிய, அகலப்பாதை, இரட்டைபாதை உட்பட பல்வேறு திட்ட செலவினங்களுக்கான நிதியாக மொத்தம் ரூ.9,286.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியை (ரூ.9,048 கோடி) விட ரூ.238 கோடி அதிகம். அதேநேரம், புதிய, இரட்டை பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில், புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.976கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது, ரூ.301.28 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டத்துக்கு, முந்தைய பட்ஜெட்டில் ரூ.2,224 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.1,928.75 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
» 12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
» மாநாட்டு தேதி அறிவிப்புக்கு முன்னதாக நடிகர் விஜய் கட்சியின் கொடி ஆக.22-ல் அறிமுகம்?
முந்தைய இடைக்கால பட்ஜெட்டில், அகலப்பாதை திட்டத்துக்கு ரூ.413 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.478 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்மயமாக்கல் திட்டத்துக்கு முந்தைய பட்ஜெட்டில் ரூ.111கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதுரூ.156.42 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதை திட்டம்: திண்டிவனம் - நகரி (179.2 கி.மீ.) புதிய திட்டத்துக்கு ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.153 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழி) 143.5கி.மீ. திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.18.72 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மொரப்பூர் - தருமபுரி (36 கி.மீ.) திட்டத்துக்கு தற்போது ரூ.49.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பாதை திட்டத்துக்கு ரூ.1,000: தமிழகத்தில் நடைபெற்று வரும் நேரடி 10 புதிய பாதை திட்டங்களில், 5 புதிய பாதை திட்டத்துக்கு தலா ரூ,1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திண்டிவனம் -செஞ்சி - திருவண்ணாமலை (70கி.மீ.), சென்னை - கடலூர் (மாமல்லபுரம் வழி) 88.30 கி.மீ., அத்திப்பட்டு - புட்டூர் (88.30 கி.மீ.), ஈரோடு - பழனி (91.05 கி.மீ.), பெரும்புதூர் -கூடுவாஞ்சேரி (60 கி.மீ.) திட்டம் ஆகிய 5 புதிய பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் ஒரு புதிய பாதை திட்டத்துக்கு ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அகலப்பாதை திட்டம்: கடலூர் - சேலம் (விருத்தாசலம் வழி) 191 கி.மீ. இரட்டை பாதை திட்டத்துக்கு ரூ.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, விழுப்புரம் - காட்பாடி (161 கி.மீ.) அகலப்பாதை திட்டத்துக்கு ரூ.19.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் (90.41 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.9.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - அத்திப்பட்டு (22.1 கி.மீ.) 4-வது பாதை திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.7.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, திருவள்ளூர் - அரக்கோணம் (26.83 கி.மீ.) 4-வது பாதை திட்டத்துக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி (86.56 கி.மீ) திட்டத்துக்கு ரூ.940.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரட்டை பாதை திட்டம்: காட்பாடி - விழுப்புரம் (160.10 கி.மீ.), சேலம் - கரூர் - திண்டுக்கல் (160 கி.மீ.), ஈரோடு - கரூர் (65 கி.மீ.) திட்டம் ஆகிய 3 திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது பணி நடைபெற்றுவரும் சென்னை கடற்கரை - எழும்பூர் (4.3 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.143.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேயின் புதிய, இரட்டை பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டு, மற்ற செலவினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறும்போது, "முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேயின் புதிய, இரட்டை பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தற்போதைய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மற்ற திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இதனால், புதிய, அகலப்பாதை திட்டத்தின் மதிப்பு அதிகரிக்கும்" என்றார்.
ரயில்வே திட்டத்துக்கு ரூ.1,000 ஒதுக்கப்படுவது ஏன்? - மத்திய பட்ஜெட்டில், ஏதாவது ஒரு ரயில்வே திட்டத்துக்கு ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்படுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இதற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட சில மத்திய பட்ஜெட்களில், புதிய ரயில்வே பாதை திட்டங்களில் சிலவற்றுக்கு ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட சில புதிய பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கு ரூ.1000 மட்டும் ஏன் ஒதுக்கப்படுகிறது என்பது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதன்மூலமாக, அந்த திட்டங்கள் முடக்கப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை குறிக்கிறது. பொதுவாக, ரூ.1,000 நிதி ஒதுக்கப்படுவது புதிய திட்டங்களில் அதிகமாகப் பார்க்கமுடியும். இந்த திட்டங்கள் அடுத்த ஆண்டு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இது வழக்கமான நடைமுறைதான்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago