அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

By இரா.கார்த்திகேயன்

அவிநாசி: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

65 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று (ஆக.17) காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் நீரேற்று முறையில் நீர் நிரப்பப்படுவதை மலர்தூவி வரவேற்றார். இந்த திட்டத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.

இதையடுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால், இந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, 1972-ம் ஆண்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற போது, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அவிநாசி அருகே தாமரைக்குளத்தில் ஈடுதேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்,

மீண்டும் ஆட்சி மாற்றத்தால், சுணக்கம் ஏற்பட்டது. பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்தில் ஆண்டொன்றுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை, வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் 1065 கிலோமீட்டர் நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தம் 428 ஏரிகள், குட்டைகள், 8151 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதன் மூலம் நிலத்தடி நீர் மேம்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்” என்றார்.

ஈடு தேங்காய் உடைக்கும் போராட்டம்: அதேபோல் இந்த திட்டத்தில் விடுபட்ட மற்றும் ஆய்வு செய்யப்பட்ட 1400 குளம், குட்டைகளை சேர்க்க வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு அவிநாசி அருகே தாமரைக்குளத்தில் உண்ணாவிரத போராட்டம் துவங்கப்பட்ட இடத்தில், அத்திக்கடவு- அவிநாசி போராட்டக்குழுவினர் சார்பில் ஈடு தேங்காய் உடைக்கும் நிகழ்வும் மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டமும் இன்று (ஆக.17) மாலை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தேங்காய்களை உடைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE