குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம் போல பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய குண்டர்கள் யார் என்பதை தீவிரமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம் போல சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிதி மோசடி வழக்கில் கைதான செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது, காவல் துறை தரப்பில், ‘கைது செய்யப்பட்டுள்ள செல்வராஜின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, போலியாக ஊதியச் சான்றுகள் தயாரிக்கப்பட்டு, அதன்மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் ரூ. 3.30 கோடி வரை நிதி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு மனுதாரரே மூளையாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அவை அனைத்தும் தனிநபர் சார்ந்த குற்றங்கள். இதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை மனுதாரர் மீது பிரயோகப்படுத்தியிருப்பதை அனுமதிக்க முடியாது. போலீஸார் உரிய விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கலாம்’ எனக் கூறி செல்வராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.

மேலும், “குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய குண்டர்கள் யார் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இதுபோல குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம்போல சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகத்தையே வெளிப்படுத்துகிறது.

போலீஸாரின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றமும் வேடிக்கை பார்க்காது. சட்டத்துக்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் காவலில் இருந்தாலும் அதுவும் சட்டவிரோதமானது தான் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே போலீஸார் குண்டர் தடுப்புச்சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE