மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட முயற்சி? - கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு!

By என்.சன்னாசி


மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூடுதல் விவரங்களுடன் திட்ட அறிக்கை அனுப்ப அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்புகள் வெளியானது. இதன்படி, முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலும், சுமார் 31 கிலோ மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது. திருமங்கலம் - மதுரை வசந்தநகருக்கு உயர்நிலை பாலமும், வசந்தநகர் - தல்லாகுளம் பெருமாள் கோயில் வரையிலும் 10 கி.மீ ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடைக்கு மேல்மட்ட பாலமும் கொண்ட மெட்ரோ வழித்தடம் அமைகிறது. இத்திட்டத்தில் 5 கி.மீ., சுரங்கப்பாதையிலும், எஞ்சிய 26 கி.மீ., தூரம் மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்களில் மதுரை ரயில் நிலையத்தை ஒருங்கிணைத்து ஒன்றும், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் என, 3 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. திட்டத்திற்கான மண் பரிசோதனை, வழித்தடம், ரயில் நிலையம் அமையும் பகுதிகளில் ஆய்வுப் பணி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் குழுவினர் முடித்து அரசுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மாநில அரசு ரூ.8,500 கோடி அறிவித்த நிலையில், விரிவான திட்ட அறிக்கையின் முடிவில் ரூ.11,360 கோடியாக உயர்த்தப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை கடந்தாண்டு ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக திட்டம் காத்திருந்தபோதிலும், திட்டத்திற்கான கடன் தொகையை வழங்கும் ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் திட்டத்துக்கான நிதியைப் பெறும் முயற்சிகள் நடக்கின்றன.

ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு கழக அதிகாரிகள், மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் அடங்கிய குழுவினர் மதுரை மெட்ரோ வழித்தடம், ரயில் நிறுத்தம் அமையும் பகுதியை ஆய்வும் செய்தனர். எனினும் திட்டத்துக்கு முறையான (அப்ரூவல்) அனுமதி கிடைத்தால் மட்டுமே நிலம் கையகப்படுத்தல், அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், இத்திட்டம் குறித்து மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டில் கடன் தொகை தவிர, எஞ்சிய நிதியில் தலா 50 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கவேண்டும். மத்திய அரசு சில விளக்கம், கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களும் மாநில அரசுக்கு அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அதை மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்க வேண்டும். விரைவில் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் கிடப்பில் இல்லை. பரிசீலனையில் தான் உள்ளது” என்றார்.

மதுரை மெட்ரோவை வஞ்சிக்கும் மத்திய அரசு’ - சு.வெங்கடேசன் எம்.பி: மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சு.வெங்கடேசன் , “மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தில் நயவஞ்சகத்தின் முழு இலக்கணத்தை பிரதமர் மோடி அரசு எழுதிக் கொண்டு இருக்கிறது. மதுரை மெட்ரோ குறித்து மத்திய அரசு பேச மறுக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேலையை பாஜக அரசு செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE