ரூ.1 கோடி கேட்டு எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக நிர்வாகி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கோவை சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரான திமுக நிர்வாகி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.11 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறி எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மான நஷ்டஈடு கோரி திமுகவின் சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரான ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்க எஸ்.பி.வேலுமணிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜூம், எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி தவறானது என தெரிவித்துள்ள மனுதாரர், அந்த நாளிதழ்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் பேசிய எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மட்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரத்தை மான நஷ்ட ஈடாக கோர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அதேசமயம், இந்த சம்பவம் குறித்து மட்டும் எதிர்காலத்தில் மனுதாரர் குறித்து வேலுமணி எதுவும் பேசக்கூடாது என நிரந்தர தடை விதிக்கிறேன். ஆனால், மனுதாரரின் மற்ற நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவும், பேசவும் பொதுவாழ்வில் உள்ள எதிர்மனுதாரரான வேலுமணிக்கு உரிமை உள்ளது. எனவே, நிரந்தர தடை தவிர, மான நஷ்ட ஈடு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை ஏற்க முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE