கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, அரசு மருத்துவ மனைகளில் இரவில் மருத்துவர்கள் தங்குமிடங்களில் போதிய வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE