சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் நமது ஆட்சிதான்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அடுத்த2 ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்என்று திமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஸ்டாலின் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் 40-க்கு40 வெற்றியை ஈட்டித்தந்த அனைவருக்கும் நன்றி. கடந்த 2019மக்களவைத் தேர்தல் தொடங்கி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்வரை தொடர்ச்சியாக வென்றுள்ளோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் திமுகஆட்சிதான் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.

விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்தஅளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம். தமிழகத்தில் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால், அதற்கு நம்முடைய களப்பணி மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாற்றை எழுதியது நாம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, சில மாவட்ட செயலாளர்கள் மீதும், மாவட்ட நிர்வாகிகள் மீதும் புகார்கள் வந்துள்ளன. அவை குறித்து விசாரணை நடத்தப்படும். அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் யாராவது தவறு செய்தால், பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று கடுமையாக முதல்வர் எச்சரித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துணை முதல்வர் பதவி: அமைச்சர் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பேச்சு எழுந்துள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதி கட்சியையும் நிர்வாகம் செய்ய வசதியாக, தற்போதுள்ள 72 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக உயர்த்தி, இளைஞரணி நிர்வாகிகளையும் மாவட்ட செயலாளர்களாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தீர்மானங்கள்: இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என்ற வெற்றியை பெற்றுத் தந்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக, பவளவிழா ஆண்டு நிறைவை முன்னிட்டு முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி கூட்டங்கள் நடத்தவும் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாத மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE