“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை” -  செல்வப்பெருந்தகை கருத்து

By இ.மணிகண்டன்

விருதுநகர்: “பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதைப் போன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு வாய்ப்பே இல்லை,” என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று (ஆக.16) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மாணிக்கம்தாகூர் எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னதாக விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் காமராஜர் உருவச் சிலைக்கு செல்வப்பெருந்தகை கட்சியினரோடு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜாசொக்கரும் மாணிக்கம்தாகூர் எம்.பி.யும் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளார். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த இக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதையொட்டி பெருந்தலைவர் காமராஜர் வீட்டில் அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளோம். மண்ணில் மனிதர்கள் உள்ளவரை மறக்கமுடியாத மாபெரும் தலைவர் காமராஜர். அவரது வழியில் கட்சியை வலிமைப்படுத்தவும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் உறுதியேற்றுள்ளோம்.

நேற்று பிரதமர் பேசுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு வாய்ப்பே இல்லை என பலமுறை கூறிவிட்டோம். இது தொடர்பாக நீண்ட நெடிய அறிக்கை ஒன்றும் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். மேலும், வக்பு வாரிய சொத்துகள் திருச்செந்துறையில் இதுவரை இடம் வாங்க முடியாமலும் விற்க முடியாமல் இருந்தது. தற்போது யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம், விற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்து கேட்டபோது, “இந்த தகவல் வந்தவுடன் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE