தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக கேழ்வரகு கொள்முதல்: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: “நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகி எனப்படும் கேழ்வரகை வெளிமாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி, ரங்கநாதன் தெரு நியாய விலைக்கடை ஆகியவற்றை இன்று (ஆக.16) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் .பழனி தலைமையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில், வளவனூரில் உள்ள 13 நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், வங்கியின் அலுவலர் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகள், அலுவலகப் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 42 பயானிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.713.5 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.235.4 கோடி வேளாண் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.670 கோடி வரை வேளாண் கடனுதவிகள் வழங்கப்பட்டு 1.2 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், 75,908 நபர்களுக்கு ரூ.651.18 கோடி ஒட்டுமொத்த கூட்டுறவு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 20.44 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 380 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதை மேம்படுத்தும் விதமாக 12 ஆப்ரேஷனல் குடோன்கள் ரூ.34 கோடி மதிப்பிலும், இதர கிடங்குகள் ரூ.32 கோடி மதிப்பிலும், பாதிப்படைந்த கிடங்குகள் ரூ.95 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில், 210 நியாய விலைக்கடைகளை மேம்படுத்தி ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகி எனப்படும் கேழ்வரகை வெளிமாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளுக்கு முதல், இரண்டாம் வெள்ளிகளிலும் மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை என்று இருப்பதை மாற்றி ஒரே கிழமையில் விடுமுறை அளிப்பது குறித்து பணியாளர்கள் சங்கங்களிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரைக்கு தட்டுப்பாடே கிடையாது. நியாயவிலைக் கடைகளில் அடையாளம் அறிய விரல் ரேகை மட்டுமல்லாது வருங்காலங்களில் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் தேர்தலுக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரகண்டநல்லூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் அரகண்டநல்லூர் நவீன அரிசி அறவை மில் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சுவர்ணலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், விழுப்புரம் மாவட்ட நுகர்வேர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கண்ணன், துணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, விழுப்புரம் கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராகிணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்