சென்னை: கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும் - பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்திராத ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது நம் தலைவர் கலைஞரின் மறைவின்போதுதான். 95 ஆண்டுகால வாழ்க்கையில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் -நிர்வாகம் – கலை – இலக்கியம் – திரைத்துறை - இதழியல் என பன்முகச் சாதனைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
அவருடைய திறமை எல்லை கடந்த வரவேற்பைப் பெற்றவை. அதற்குக் காரணம், தலைவர் கலைஞரின் அத்தனை பங்களிப்புகளிலும் முதன்மை நோக்கமாக இருந்தது தமிழ் – தமிழர் - தமிழ்நாடு இவற்றின் முன்னேற்றம்தான். அதனை அவர் சுயமரியாதை - சமூகநீதி என்ற மனித உரிமைக் கொள்கையின் வழியே நிறைவேற்றிக் காட்டினார். அந்தக் கொள்கையைத் தன்னுள் விதைத்த தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்டவையாகத் திகழ்கின்றன.
» தென் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் போதுமாக இல்லை: ஐகோர்ட் அதிருப்தி
எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடியர் நம் தலைவர் கலைஞர். தன் 14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, மொழிப் போர்க்களம் புகுந்த அவர்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு விழாக்கள், கல்வி நிலையங்களில் பாடச் செய்தார்.
செம்மொழி மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தி, அதில் தமிழ் இணைய மாநாட்டிற்கும் உரிய இடமளித்து, இன்று கணினியிலும் கைப்பேசியிலும் எல்லாரும் தமிழைப் பயன்படுத்துவதற்கான ஆக்கமாகவும் ஊக்கமாகவும் திகழ்ந்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்து வாழும் நம் அன்னைத் தமிழ், காலந்தோறும் வளர்ச்சி பெற்று வென்றிட வேண்டும் என்பதே முத்தமிழறிஞரின் மூச்சாகவும் செயலாகவும் இறுதிவரை இருந்தது.
தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தலைவர் கலைஞர்.
தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.
இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் ’தமிழ் வெல்லும்’ என்பதை நிறுவியிருக்கிறார். இமயம் போல உயர்ந்து நிற்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன். இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago