குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்கட்டமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை வழங்கும் வகையில், 1,000 முதல்வர் மருந்தகங்கள் பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்படும் என்றும் தியாகிகள், வாரிசுகளுக்கான ஓய்வூதியம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:

விடுதலையை பாடுபட்டு பெற்றுத்தந்த தியாகிகள், எந்த நோக்கத்துக்காக போராடினார்களோ, அந்த நோக்கம் நிறைவேற எந்நாளும் உழைக்க இந்நாளில் உறுதியேற்போம். விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் பெற்றுத்தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

எந்த மாநிலமும் செய்யாத முறையில் அனைத்துத் தியாகிகளையும் போற்றி வருகிறது தமிழகம். அந்தத் தியாகிகளின் கனவையும் நிறைவேற்றி வருகிறது. அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும், 8 கோடி மக்களையும் சென்றடையும், `எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமூக நீதி அடிப்படையிலான, வளர்ச்சித் திட்டங்களாகத் திகழ்கின்றன.

அந்த வகையில், சுதந்திர தினத்தில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதன்படி, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும், தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் நாள் முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு தேவையான கடனுதவியுடன் ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்க்கை, வாழ்வாதார மேம்பாட்டுக்கு “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தில் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிக்கடன் பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங் களும் இதில் பயன்பெறலாம்.

அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன் னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ ரூ.120 கோடி முதலீட்டு மானியம் மற்றும் 3 சதவீத வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.

தியாகிகளுக்கு பயன்: மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரம் என்பது ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தற்போது, வழங்கும் மாத குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான ரூ.10 ஆயிரம் என்பது ரூ.10,500 ஆக வழங்கப்படும்.

தமிழகத்தில், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி கள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநிலப் பகுதிகள் அதிகம் உள்ளன. அங்குப் பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும். பாதிப்புகளை முன்கூட்டியே அறியவும், தவிர்க்கவும், தணிக்கவும், அரசு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து குழு அளிக்கும் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE