புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர்: தகைசால் தமிழர் உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தகைசால் தமிழர், அப்துல்கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.

இந்தியாவின் 78-வது சுதந்திரதினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், 119 அடி உயரமுள்ள கம்பத்தில், தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, கோட்டை கொத்தளம் பகுதிக்கு காலை 8.50 மணிக்கு போக்குவரத்து போலீஸார் அணிவகுப்புடன் வந்த முதல்வரை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். அப்போது, தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார்,கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் வான்படை அதிகாரி ஏர் கமாண்டர் ரத்தீஷ்குமார், கிழக்கு மண்டல கடலோர காவல்படை அதிகாரி டோனி மைக்கேல், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்,சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல்ஆணையர் ஏ.அருண் ஆகியோரை முதல்வருக்கு, தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் திறந்த ஜீப்பில் சென்று பார்வை யிட்டார்.

அணிவகுப்பு தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, ஆண்கள் கமாண்டோ, சென்னை பெருநகர காவல் பெண்கள் படை, கடலோர பாதுகாப்புக் குழுமம், தமிழ்நாடு சிறப்பு காவல் ஆண்கள் படை, நீலகிரிபடை, கொடி அணி, மாநில காவல் வாத்தியக் குழு, குதிரைப்படைப் பிரிவு ஆகியவற்றின் அணி வகுப்பை பார்வையிட்டார். இந்த அணிவகுப்பில் இந்தாண்டு, உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையில் கேரள ஆயுதப் படையினர் பங்கேற்றனர்.

இதையடுத்து, காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளம் வந்த முதல்வர்மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சுதந்திர தின உரையாற்றினார். அதில், குறைந்த விலையில் மருந்துகள் விற்பனைக்காக ‘முதல்வர் மருந்தகம்’, முன்னாள் ராணுவத்தினருக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம், தியாகிகள்குடும்ப ஓய்வூதியம் உயர்வு, மலைப்பகுதிகளில் பேரிடர் தொடர்பான ஆய்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

தகைசால் தமிழர் விருது: அதன்பின், ‘தகைசால் தமிழர்’ விருதை தமிழக காங்கிரஸ் முன்னாள்தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கினார். ரூ.10 லட்சம் விருதுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்து வேலுக்கு ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம்’ விருதையும், வயநாடு நிலச்சரிவின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிச்சலாகச் சென்று மருத்துவ உதவி அளித்த நீலகிரியைச் சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கு துணிவு, சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதையும் வழங்கினார். விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

நல்லாளுமை விருது: இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தொடர்பான தரவுகளை சேகரித்ததற்காக முதல்வரின் முகவரித் துறை தலைமை தொழில்நுட்ப அதிகாரி டி.வனிதாவுக்கு ‘நல்லாளுமை’ விருதை முதல்வர் வழங்கினார். மேலும், பொதுநூலகத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், உறுப்பு கொடை தொடர்பாக,உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, ‘நான் முதல்வன்’ திட்டத்தைசிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யா ஆகியோருக்கும் ‘நல்லாளுமை’ விருதுகளை முதல்வர் வழங்கினார்.

மாற்று திறனாளிகள் சேவை விருது: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்தசேவை புரிந்த மருத்துவர் ஜா.விஜய லட்சுமி, சிறந்த நிறுவனமான சென்னையைச் சேர்ந்த வித்யாசாகர் நிறுவனம், சமூக பணியாளரான சென்னையைச் சேர்ந்த ம.சூசை ஆன்றணி,அதிகளவில் பணியமர்த்திய நிறுவனமான தூத்துக்குடி மாவட்டம், சந்தானம் பேக்கேஜிங் நிறுவனம், சிறந்த மத்திய கூட்டுறவு வங்கியான காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தின் கீழே, தலைமைச் செயலக கட்டிடம் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில், மகளிர் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய சமூக சேவகர் சென்னையைச் சேர்ந்த மீனா சுப்பிரமணியனுக்கும், சிறந்த தொண்டு நிறுவனமாக மதுரை, ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்பட்டது

‘சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது’ என,சிறந்த மாநகராட்சி - கோயம்புத்தூர்,சிறந்த நகராட்சி - திருவாரூர், சிறந்தபேரூராட்சி - கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக 14-வது மண்டலத்துக்கு வழங்கப்பட்டன.

‘முதல்வரின் மாநில இளைஞர் விருது’ என, ஈரோடு - நெ.கதிரவன், கன்னியாகுமரி - ஜோஷன் ரெகோபெர்ட், கடலூர் - சி.ஜெயராஜ் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் கடலூர் - செ.நிகிதா, புதுக்கோட்டை- கவின்பாரதி, விருதுநகர் - ச.உமாதேவி, ராமநாதபுரம் - கா.ஆயிஷா பர்வீன் ஆகியோருக்கும் முதல்வர் வழங்கினார். தொடர்ந்து விருதாளர்கள் அனைவருடனும் குழு புகைப்படம் எடுத் துக் கொண்டார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்,பி,க்கள், எம்எல்ஏ,க்கள், அயல்நாடுகளின் தூதரக அதிகாரிகள், தமிழக துறைகளின் செயலர்கள், துறை அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE