ஆவின் பால் பாக்கெட்டில் சுதந்திர தின வாழ்த்து இடம்பெறவில்லை: பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களில், சுதந்திர தின வாழ்த்து இடம் பெறவில்லை. இதனால் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 32 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பாலை கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விநியோகம் செய்து வருகிறது.

கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு, ரம்ஜான், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ஆவின் பால் பாக்கெட்களில் வாழ்த்துகள் இடம்பெறும். இதுதவிர, குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் ஆகிய நாட்களிலும் வாழ்த்து இடம்பெறும்.

இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில்நேற்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களில், சுதந்திர தின வாழ்த்து இடம்பெறவில்லை. இதனால் நுகர்வோர் ஆர்வலர்கள், ஆவின் பால் முகவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் ஆர்வலர் எம்.சோமசுந்தரம் கூறும்போது, ‘‘பண்டிகை மற்றும் குடியரசு, சுதந்திர தின நாட்களில் ஆவின் பால் பாக்கெட்களில், வாழ்த்து இடம்பெறுவது வழக்கம். ஆனால்,இந்த ஆண்டு குடியரசு, சுதந்திரதின வாழ்த்து ஆவின் பாக்கெட்டில் இடம்பெறவில்லை. இது ஏன் என்று புரியவில்லை’’ என்றார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், தீபாவளி ஆகிய பண்டிகைநாட்களிலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம்ஆகிய நாட்களிலும் ஆவின் பால்பாக்கெட்களில் வாழ்த்து இடம்பெறும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சுதந்திர தின வாழ்த்து 2-வது முறையாக பால் பாக்கெட்டில் அச்சிடப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக குடியரசு, சுதந்திர தினம் மற்றும் தேசிய பால் தின வாழ்த்து ஆவின் பால் பாக்கெட்டில் அச்சிடுவதை தவிர்த்து வருகின்றனர். திமுக அரசுக்கு திராவிடம் என்றால் தேவாமிர்தமாக இனிக்கும்போது, தேசிய தினங்கள் என்றால் எட்டிக்காயாக ஏன் கசக்கிறது என்று தெரியவில்லை.ஆவின் பால் பாக்கெட்டில் சுதந்திர தின வாழ்த்து அச்சிடப்படாததற்கான காரணத்தை ஆவின் நிறுவனம் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் வினீத்திடம் கேட்டபோது, ‘‘சில முக்கியமான பண்டிகைகளுக்கு மட்டுமே ஆவின்பாக்கெட்டில் வாழ்த்து வெளியிடப்படுகிறது. அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் ஆவின் சார்பில் பண்டிகைகள் உட்பட பல்வேறு தினங்களுக்கு வாழ்த்து வெளியிடப்படுகிறது. சுதந்திர தின, குடியரசு தின வாழ்த்து வரும் ஆண்டுகளில் இடம்பெறுவது தொடர்பாக மக்களின் கோரிக்கை அடிப்படையில் பரீசிலிக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE