தமிழ் உட்பட 22 மொழிகளை ஆட்சி மொழிகளாக்க சட்டத் திருத்தம்: வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்க உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றில், “இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்கிட உத்திரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அமைச்சரவைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், “மத்திய அரசின் அலுவல் மொழிகள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும், நீதிமன்ற உத்தரவின் மூலம் எதுவும் செய்ய முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞரும் அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கெண்ட நாடு என்றும், தேசிய ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறபோது, பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பது மட்டுமே சரியான நிலைப்பாடாக இருக்கும்.

2001 ஆம் ஆண்டில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் சட்ட முன்வடிவை நான் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக, வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் எனறு நீண்ட காலமாக தமிழ்நாட்டின் சார்பில் மத்திய அரசிடம் வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி நிலைபெற மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

மத்திய அரசின் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளும் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, யூ.பி.எஸ்.சி. முதல் நிலைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தேர்வாணையம் விடாப்பிடியாக தேர்வை இரத்து செய்ய மறுத்துவிட்டது.

மாநிலங்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கோடிட்டுக் காட்டி வருகிறார்.

எனவே, பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்க உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE