‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் தனியாக கூடிய தூத்துக்குடி - பொட்டலூரணி மக்கள்!

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் நடத்தாததைக் கண்டித்து மக்கள் கூடி, பொட்டலூரணி கிராமத்தில் நடத்திய ‘மக்கள் கிராம சபை’ கூட்டத்தில், 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் நான்கு ஊர்களும், ஒன்பது வார்டுகளும் உள்ளன. அவற்றில் பொட்டலூரணி கிராமத்தில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொட்டலூரணி கிராமத்தில் 2 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை தங்கள் ஊரில் நடத்த வேண்டும் என பொட்டலூரணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.

ஆனால், இன்று எல்லைநாயக்கன்கட்டி ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் செட்டிமல்லன்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட்டலூரணி கிராம மக்கள் ஒன்று திரண்டு ‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் தனியாக கிராம சபை கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி, 4-வது வார்டு உறுப்பினர் சுபா, 5-வது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி, 6-வது வார்டு உறுப்பினர் சத்தியா நாராயணலட்சுமி, 7-வது வார்டு உறுப்பினர் பூமாரியம்மா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தனியார் மீன்கழிவு ஆலைகளுக்கு எதிரான போராட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பொட்டலூரணி கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொட்டலூரணி கிராம மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். மக்களவை தேர்தலின் போது பொட்டலூரணி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பொட்டலூரணியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE