‘தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ - சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என்ற மூன்றாண்டு சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு கடந்த 2021 மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4-ம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. தமிழகம் இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகளை மத்திய அரசின் நிதி ஆயோக், நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் பறைசாற்றியுள்ளன.

தமிழகம் இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில், வேளாண் உற்பத்தியில், மருத்துவத்துறையில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள், ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம், மகளிர் முன்னேற்றத்தில், கர்ப்பிணிகள் சுகாதாரத்தில், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில், மகப்பேறுக்கு பிந்தைய சிசு கவனிப்பில் முதலிடம், தோல் பொருட்கள் ஏற்றுமதி, மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம், பொறியியல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் 2-ம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழகம் முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது.

இவைமட்டுமினறி, முதல்வரின் காலை உணவுத்திட்டம் தெலங்கானா மாநிலம், கனடா நாட்டிலும்பின்பற்றப்படுகிறது. நான்முதல்வன் போன்ற திட்டங்கள் தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் புகழ் பரப்புகிறது. திட்டங்கள்,அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ‘தமிழரசு’ இதழ்மூலம் ‘தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!’ எனும் சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, எழுதுபொருள் அச்சகத்துறை ஆணையர் வெ.ஷோபனா, செய்தித்துறை செயலர் வே. ராஜாராமன்,செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE