கிராமப்புறங்களில் உள்ள 2,500 கோயில்களுக்கு ரூ.50 கோடி நிதி: திருப்பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள தலாரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பழனியில் ஆக.24 மற்றும்25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடுநடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார்.

அப்போது, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம்பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம்முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம்  சிவஞானபாலய சுவாமிகள், சுகி சிவம்,மு.பெ.சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒருகால பூஜை கூட செய்ய இயலாத கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒருகால பூஜைத் திட்டத்தில் ஏற்கெனவே ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் வைப்பு நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம்,17 ஆயிரம் கோயில்கள் பயன்பெறுகின்றன. அத்துடன், முதன்முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 2024-25-ம் நிதியாண்டுக்கு கூடுதலாக ஆயிரம் கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதுடன், வைப்பு நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, 2023-24-ம்நிதியாண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறக் கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளகோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெறும்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE