வழக்கமாக ஜூன் 12-ல் திறக்கும் நடைமுறை: பருவ மழை கைகொடுத்தால்தான் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு

By டி.செல்வகுமார்

தென்மேற்குப் பருவ மழை கைகொடுத்தால் மட்டுமே இந்தாண்டு டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த அணை கட்டியதில் இருந்து கடந்த 84 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 9 ஆண்டு கள் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. கொள்ளளவு 93 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கனஅடி). அணையின் நீர் தேங்கும் பகுதி 153 சதுர கிலோ மீட்டராகும். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்.

இதன்மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறுவை, தாளடி என இருபோக சாகுபடி 2 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி மட்டும் 13 லட்சம் ஏக்கரிலும் நடக்கிறது.

மேட்டூர் அணை திறப்பு குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து 40 தடவைக்கு மேல் நிரம்பி வழிந்துள்ளது. 1960-களில் ஓரிரு முறைகூட நிரம்பி இருக்கிறது. கடைசியாக 2013-ம் ஆண்டில் நிரம்பியது. இந்த அணை கட்டியதில் இருந்து கடந்த 84 ஆண்டுகளில் டெல்டா பாசனத்துக்காக 26 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பருவ மழை நன்றாகப் பொழிந்த காலங்களில் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக 6 தடவை (1936, 1937, 1938, 1940, 1947, 2011) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

1942, 1943, 1944, 1945- ஆண்டுகளில் மே மாதமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு நவம்பர் மாதமும் 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல வருடங்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, கர்நாடக அணைகளின் நீர்மட்டம் அதிகமாக உள்ளது. 124.8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நேற்று 71.16 அடியும் 65 அடி உயரமுள்ள கபினி அணையில் 35.7 அடியும் 129 அடி உயரமுள்ள ஹேரங்கி அணையில் 79.14 அடியும் 117 அடி உயரமுள்ள ஹேமாவதி அணையில் 57.83 அடியும் தண்ணீர் உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்த 120 அடி. நேற்றைய நீர்மட்டம் 35.21 அடி. கடந்தாண்டு இதேநாளில் 21.51 அடிதான் இருந்தது. காவிரில் நீர் திறந்துவிடக் கோரி தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பருவ மழை கைகொடுத்தால்தான் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்