பிறந்தநாளையொட்டி மனைவியுடன் நடந்தே வந்து மணக்குள விநாயகரை தரிசித்த புதுச்சேரி ஆளுநர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தனது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இன்று (ஆக.14) ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸிலிருந்து தனது மனைவியுடன் நடந்தே மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது 72- வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என கோயில் தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருநத்து. அதன்படி அவர் ராஜ்நிவாஸிலிருந்து மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனது மனைவி, குடும்பத்தாருடன் நடந்தே வந்தார். கோயிலுக்கு முதல்முறை வந்த அவரை கோயில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

அதன்பின்பு ஆளுநர் தனது குடும்பத்தாருடன் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. உற்சவமூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் நடந்தன.

கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு விநாயகர் சிலை தரப்பட்டது. அதன் பின்பு தங்கம் மற்றும் வெள்ளித் தேர்களை ஆளுநர் பார்வையிட்டார். பிறகு, ஒரு சில பக்தர்களுக்கு தனது கையால் அன்னதானம் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி பேரவையில் பேரவைத் தலைவர் செல்வம் ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பேரவை நிகழ்வுகள் முடிந்த பின்பு முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ராஜ்நிவாஸ் சென்று ஆளுநருக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE