நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று (செவ்வாய்கிழமை) கைதான தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இங்கே முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரம், ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் திரண்டு தங்களின் பணத்தைக் கேட்டு வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்ததாக அந்த நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், புதுக்கோட்டையில் உள்ள கட்டியா வயல் என்ற பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராக உள்ள இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவை நேற்று இரவு அழைத்து வந்தனர். அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்