சுதந்திர தின விருதுகளை புறக்கணிக்க கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முடிவு: பின்னணி என்ன?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஒவ்வொரு ஆண்டும், கெஞ்சி கெஞ்சி விருது வாங்க வேண்டிய உள்ளது என்பதால், இந்த சுதந்திர தின விருதுகளை மட்டுமில்லாது இனி வரக்கூடிய காலங்களிலும் இந்த விருதுகளை புறக்கணிப்பதாக மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது துறை ரீதியாக சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் விழாக்களில் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால், மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் மதுரை மாவட்ட நிர்வாகம் பிற துறைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை கால்நடை பராமரிப்பு துறைக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் கூறுகையில், “காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, இப்படிப்பட்ட பல்வேறு துறைகளுக்கு 50-க்கும் மேற்பட்டு அதிகபட்சம் 100 பேர்களுக்கு ஒவ்வொரு துறைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை துறைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போதும், சுதந்திர தினத்தின் போதும் ஏதோ ரொட்டித் துண்டுகளை போடுவது போன்று ஒன்று அல்லது இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அதுவும் அதிகாரிகள் அந்த விருதுகளை கெஞ்சாத குறையாக கேட்டு வாங்கும் நிலை உள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் கால்நடைத் துறையில் மூன்று நபர்களுக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை என்றாலே மாவட்ட நிர்வாகத்திற்கு புறக்கணிப்பட்ட துறையாக தோன்றுவதாகத் தெரிகிறது. எனவே, இந்த சுதந்திர தின விழாவின் போது மட்டும் அல்ல, இனி வரக்கூடிய குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது அரசுத் துறையின் சார்பாக வழங்கப்படும் விருதுகளை புறக்கணிப்பது என கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE