25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்: மின்வாரியம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உயர் அழுத்தப் பிரிவில் இடம்பெறும் 11 ஆயிரம் தொழிற்சாலைகளில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின்கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டண விவரம் அனுப்பப்படுகிறது.

இதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை, தி.நகரில் 1.42 லட்சம் வீடுகளின் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தாழ்வழுத்த தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களில் மொபைல் போன் செயலியில் கணக்கு எடுக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மொத்தம் உள்ள 60 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் முதற்கட்டமாக 25 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. அந்த மீட்டரில் சிம்கார்டு பொருத்தி அலுவலக சர்வருடன் இணைக்கப்பட உள்ளது.

இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. மேலும், மின் கணக்கீட்டுக்கு மென்பொருளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE