ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

By கி.கணேஷ்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு காரணங்கள் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர்,மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை 2ம் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார். இது தொடர்பான கருத்துருக்களை பரிசீலித்த தமிழக அரசு, இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், அதன்படியும், பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது.

இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆக.12-ம் தேதி இதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE