நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பலத்த மழை பெய்தது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம் - 6, சேரன்மகாதேவி - 25, மணிமுத்தாறு - 8.40, நாங்குநேரி - 6, பாளையங்கோட்டை - 10, பாபநாசம் - 8, ராதாபுரம் - 8, திருநெல்வேலி - 6.40. பாளையங்கோட்டையில் பரவலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தாழ்வான சாலைகளில் வாகனங்கள் நீந்தி செல்லும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் இளைஞர் மற்றும் மூதாட்டி உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். திருநெல்வேலி அருகே தாழையூத்து பாலமாடை வெயிலுகந்தம்மன் கோயில் அருகே வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது.

அப்போது மரத்தின் அடியில் நின்றிருந்த மேலபாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சமுத்திரம் (72) மின்னல் தாக்கி உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த செல்லையா மனைவி சுப்பம்மாள் (80) என்பவர் காயமடைந்தார். சீவலப்பேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் களக்காடு பச்சையாறு அணைக்கட்டு அருகே நாவல்பழம் பறித்துவிட்டு மரத்தின்கீழே உட்கார்ந்திருந்தபோது மின்னல் தாக்கியதில் ஆசாத்புரம் கீழத்தெருவைச் சேர்ந்த சிம்சோன் மகன் பிரிட்டோ (22) உயிரிழந்தார். அவருடன் இருந்த ஆனந்தராஜ் மகன் தமிழ்ச்செல்வன் (23) மற்றும் 17 வயது சிறார்கள் இருவர் என்று 3 பேர் காயமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE