ஜாபர் சாதிக் சகோதரருக்கு ஆக.27 வரை நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

By டி.செல்வகுமார் 


சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவரை ஆஜர்படுத்தினர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் தொடங்கி, அதில் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், “மனுதாரர் விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். இந்நிலையில், அவரை கைது செய்தது தேவையற்றது,” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு முகமது சலீம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (ஆக.14) தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE