அந்தமானுக்கு இடமாற்றம் செய்தும் செல்லாத ஐஎஃப்எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது மத்திய அரசு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அந்தமானுக்கு பணியிடமாற்றம் செய்த நிலையில், அங்கு செல்லாத ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தியை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், பணியை ராஜினாமா செய்து ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டதால் இந்த உத்தரவு பொருந்தாது என சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

புதுவை வனத்துறையில் துணை வனப் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி. இவர் ஊரக வளர்ச்சித் துறையில் திட்டச் செயலர் பொறுப்பும் வகித்தபோது நூறு நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் கிராம மக்கள் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அந்தமான் நிகோபார் தீவுக்கு சத்தியமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டார். சத்தியமூர்த்தியை மாற்றிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அப்போது துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசையிடம் கோரிக்கை கடிதமும் தந்தனர்.

இதனிடையே, பணியிடமாற்ற உத்தரவு வந்த நிலையிலும் சத்திய மூர்த்தி புதுச்சேரியிலேயே தங்கி இருந்தார். அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் மக்களவைத் தேர்தலில் சத்தியமூர்த்தி பாஜக கூட்டணியில் போட்டியிடுவார் என்றும் பேச்சு எழுந்தது. இந்த நிலையில், அவர் அந்தமானில் பணியில் சேராமல் புதுச்சேரியிலேயே இருந்ததால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது. அதற்கு சத்தியமூர்த்தி அளித்த விளக்கம், திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அரசுப் பணிகள் நடத்தை விதிகளை மீறியதற்காகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்ததாலும் சத்திய மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பிரகாஷ் மவுரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து சத்தியமூர்த்தியிடம் கேட்டதற்கு, "நான் ஏற்கெனவே எனது பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி விட்டதால் பணியிடை நீக்க உத்தரவு என்னைக் கட்டுப்படுத்தாது" என்று சத்தியமூர்த்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE